Kalangarai Vilakkam: பொங்கல் பரிசு ரூ.1000 ஐ சர்க்கரை அட்டைக்கும் வழங்க அனுமதி
ANY SUGGESTIONS, QUERIES, FEEDBACK: Mail to gopinathan36@gmail.com : Whats-app to 9944069494.

பொங்கல் பரிசு ரூ.1000 ஐ சர்க்கரை அட்டைக்கும் வழங்க அனுமதி





பொங்கல் பரிசுத்தொகையான ரூ.1000 பணத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க அனுமதி அளித்தது.
தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உத்தரவிட்டது. தமிழக அரசின் பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கும் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கோவையைச் சேர்ந்த டேனியல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கலாம் என உத்தரவிட்டது. அதேசமயம், சர்க்கரை மட்டும் வாங்கும் அட்டைதாரர்களுக்கும், எந்தப் பொருளும் வேண்டாம் என்ற அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கக்கூடாது என கட்டுப்பாடுகளை விதித்து வழக்கை பிப்ரவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.
பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாயை சர்க்கரை அட்டைதாரர்களும் பெறும் வகையில் நேற்றைய உத்தரவை மாற்றியமைக்க வேண்டுமென நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் தமிழக அரசு வழக்கறிஞர் மனோகர் நேற்று முறையீடு செய்தார்.
அப்போது, சர்க்கரை மட்டும் போதும் என்ற பிரிவில் 10 லட்சத்து ஒரு ஆயிரம் பேர் இருப்பதாகவும், அவர்களிலும் வறுமைக்கோட்டு எல்லையிலோ அல்லது அதற்கு கீழாகவோ இருப்பதால் அவர்களும் ஆயிரம் ரூபாய் பெற அனுமதிக்க வேண்டுமெனவும், இதுதொடர்பாக இன்றோ, நாளையோ விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
ஆனால் அவசர வழக்காக விசாரிக்க முடியாதெனவும், உத்தரவை மாற்றியமைக்க வேண்டுமென தமிழக அரசு மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கமான நடைமுறையில் விசாரிக்கப்படும் என அறிவுறுத்தினர்.
இந்நிலையில் ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவால் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகை 1000 ரூபாய் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் 10 லட்சத்து 11 ஆயிரத்து, 330 சர்க்கரை அட்டைதாரர்கள் உள்ளனர். நீதிமன்ற உத்தரவு வருவதற்கு முன்னரே 4 லட்சம் பேர் பணம் பெற்றுவிட்டனர். மீதமுள்ள 6 லட்சம் பேர் பெற இயலாத நிலையில் உள்ளனர். அதற்கு ஏற்ற வகையில் தீர்ப்பை மாற்றி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கை விசாரணை சத்திய நாராயணன் ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சர்க்கரை அட்டைதாரர்களும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலுள்ளவர்கள். ஆகவே மீதமுள்ள 6 லட்சம்பேருக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் வாக்குகளை வாங்கத்தான் இந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்ற கருத்து பொதுமக்களிடையே உள்ளது. நீங்கள் வழங்கும் 1000 ரூபாயை ஏன் அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தாமல் அவர்களை 10 மணி நேரம் காக்கவைத்து கொடுக்கிறீர்கள், இதன்மூலம் அரசு என்ன சொல்ல வருகிறது என்று கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற இலவசங்கள் வழங்கும் முன்னர் அதுகுறித்த வரைமுறையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பவருக்கும் இந்தப் பணத்தையும், இலவசங்களையும் வழங்குகிறீர்கள். இன்னும் எத்தனை காலம்தான் இலவசங்களை கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
அதேபோன்று இலவசமாக அரிசி வழங்கப்படுவது தரமற்றதாக உள்ளது. விலை இல்லா அரிசி என்பதால் அது வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படும் நிலை உள்ளது. இதற்கு மாற்றாக குறைந்தப்பட்ச விலையாவது நிர்ணயிக்கலாமே என்று தெரிவித்தனர்.
பின்னர் மனுதாரர் வழக்கறிஞரிடம் அரசின் முறையீடு குறித்து உங்கள் பதில் என்ன என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஏற்கெனவே சுமார் 2000 கோடி ரூபாய் வரை வழங்கியுள்ளனர். இது மக்களின் வரிப்பணம்தான். அதையும் முறையாக வழங்கவில்லை. அரசினுடைய எண்ணமும் வேறாக உள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள், அரசு ஏற்கெனவே அரசு அறிவித்த அடிப்படையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பணம் ரூ.1000 வழங்கக்கூடாது என்றும், தற்போது வழங்கப்படும் அட்டைதாரர்களுடன் கூடுதலாக, சர்க்கரை மட்டும் பெறும் அட்டைதாரர்களுக்கு மட்டும் பணம் கிடைக்கும் வகையில் உத்தரவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டனர்

No comments:

Post a Comment